புதுடெல்லி,
கடந்த 2016-ம் ஆண்டில் தமிழகத்திற்கே அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தை அடுத்து கேரளா இரண்டாவது இடம் பிடித்து உள்ளது. மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா வெளியிட்டு உள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என கூறிஉள்ளார். தமிழகத்திற்கு 47.22 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளனர்.
இந்தியாவிற்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு மட்டும் 19.1 சதவிதம் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு வந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக கேரளாவிற்கு 10.38 லட்சம் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு வந்து உள்ளனர். இது இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 4.2 சதவிதம் ஆகும். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் 9.5 சதவிதம் கொண்டு உள்ளது. கர்நாடகாவிற்கு 8 சதவிதம் சுற்றுலாப் பயணிகளும், தெலுங்கானாவிற்கு 5.9 சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இம்மாநிலங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்று உள்ளது.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் கேளாவில் எண்ணிக்கயானது 1.32 கோடியாக குறைந்து உள்ளது, புதுச்சேரிக்கு 13.99 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 1.17 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.