தொடங்கி வைத்தார்
அகமது நகர் மாவட்டம் ஷீரடியில் உள்ள சாய்பாபா பொது மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மையத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
கொரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த அலையை சமாளிக்க நம்மிடம் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஷீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு இருப்பதும், ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதும் பாராட்டுக்குரியது.
3-வது கொரோனா அலை ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. அந்த அலையை திறம்பட சமாளிக்க வேண்டும். இதற்காக ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டும். மராட்டியத்தில் நாம் சொந்தமாக தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். இதற்கு முன்னுரிமை அளித்து அரசு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், வருவாய் மந்திரி பாலசாகேப் தோரட், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.