மும்பை,
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில், குளு குளு ஏ.சி. வசதியுடன் தயாரிக்கப்பட்ட உலகத்தரத்திலான தேஜஸ் ரெயில் மும்பை வந்தது. இந்த ரெயிலில் குறைந்த தண்ணீர் செலவில் அதிக சுகாதாரம் காக்கப்படும் பயோ வேக்கம் கழிவறைகள், தண்ணீர் அளவு காட்டும் இன்டிகேட்டர்கள், தானியங்கி கதவுகள், தீ, புகையை கண்டறியும் கருவிகள், அதிநவீன ஏர் பிரேக், கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு பயணிக்கும் ஜி.பி.எஸ். வசதி கொண்ட தொடு திரை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.
பயணம் செய்யும் பயணிகளுக்கு செய்தித்தாள், குடிநீர் பாட்டில் போன்றவை வினியோகிக்கப்படும். மேலும் சிறந்த சமையல்கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்படும் என பல்வேறு சேவைகளுடன் பயணம் தொடங்கியது.
மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து கோவாவில் உள்ள கர்மாலி இடையேயான தேஜஸ் ஏ.சி. ரெயில் சேவை திங்கள் அன்று தொடங்கியது. மிகவும் கோலாகலமாக மும்பையில் பயணத்தை தொடங்கிய தேஜஸ் மறுநாள் கோவா சென்றதும்தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரெயிலில் செய்து கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் ஏன் என கேள்வி எழுப்பும் நிலையில் ரெயில் வந்து உள்ளது. ரெயிலில் ஹெட்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது, மேலும் ஸ்கிரீன்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
எங்கு பார்த்தாலும் குப்பையாக காட்சி அளித்து உள்ளது. இது அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இப்போது ரெயிலை சேதப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இரண்டாவது நாள் அந்த ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி பேசுகையில், ரெயில் சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. கழிவறைகள் நன்றாக சுத்தம் செய்யப்படவில்லை. தொடக்க நாளில் வழங்கப்பட்ட உணவு நன்றாக இல்லை, என கூறிஉள்ளார்.
கட்டணம் எவ்வளவு?
தேஜஸ் ரெயில்கள் சி.எஸ்.டி. கர்மாலி இடையே சாதாரண காலத்தில் வாரத்திற்கு 5 நாட்களும், மழை காலத்தில் (ஜூன் 10ந் தேதி முதல் அக்டோபர் 31 வரை) வாரத்திற்கு 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரெயிலுக்கு மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து கர்மாலிக்கு உணவுடன் சேர்த்து முதல் வகுப்பு கட்டணம் ரூ.2 ஆயிரத்து 740. உணவில்லாமல் ரூ.2 ஆயிரத்து 585. சாதாரண வகுப்பு கட்டணம் உணவுடன் சேர்த்து ரூ.1,310. உணவில்லாமல் ரூ.1185.
தாதரில் இருந்து கர்மாலிக்கு முதல் வகுப்பு கட்டணம் உணவுடன் ரூ.2 ஆயிரத்து 725. உணவில்லாமல் ரூ.2 ஆயிரத்து 570. 2ம் வகுப்பு கட்டணம், உணவுடன் ரூ. 1295. உணவில்லாமல் ரூ.1175.
தானேயில் இருந்து கர்மாலிக்கு முதல் வகுப்பு உணவுடன் ரூ.2 ஆயிரத்து 680. உணவில்லாமல் ரூ.2 ஆயிரத்து 525. 2ம் வகுப்பு உணவுடன் ரூ.1280. உணவில்லாமல் ரூ.1155 ஆகும்.
கர்மாலியில் இருந்து சி.எஸ்.டி.க்கு முதல் வகுப்பு (உணவுடன்) ரூ.2 ஆயிரத்து 935. உணவில்லாமல் ரூ. 2 ஆயிரத்து 585. 2ம் வகுப்பு (உணவுடன்) ரூ.1,475. உணவில்லாமல் ரூ.1,185. மழைக்காலத்தில் இயக்கப்படும் தேஜஸ் ரெயிலுக்கான கட்டணம் இதைவிட சற்று அதிகமாக இருக்கும்.