பத்ராத்ரி,
தெலுங்கானாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்டு) குழுவை சேர்ந்த 19 பேர் பத்ராத்ரி கொத்தகுடெம் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீசார் ஆகியோர் முன்னிலையில் இன்று சரண் அடைந்துள்ளனர்.
அவர்களில் 10 பேர் புலிகுண்டலா பகுதியையும், 7 பேர் செர்லா மண்டல் பகுதியையும் மற்றும் 2 பேர் தும்முகுடெம் மண்டல் பகுதியையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண் மாவோயிஸ்டுகள் ஆவர்.
இதுபற்றி பத்ராத்ரி கொத்தகுடெம் எஸ்.பி. சுனில் தத் கூறும்பொழுது, இவர்கள் 19 பேரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு குழுவின் செர்லா பகுதியில் பயங்கரவாதிகளாகவும், கிராம குழு உறுப்பினர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்த குழுவின் பல தலைவர்கள் கொரோனா பாதிப்புகளுக்கு பலியாகி உள்ளனர். கடந்த மாதங்களில், நாங்கள் கைது செய்த பல பயங்கரவாத உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது.
எனவே, தெலுங்கானா அரசு சார்பில் அனைத்து மாவோயிஸ்டு தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பயங்கரவாதிகள் சரண் அடைய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.