ஐதராபாத்
தெலுங்கானா காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டி மற்றும் கட்சியின் பல மூத்த தலைவர்கள் இன்று ஐதராபாத்தில் பல்வேறு இடங்களில் "வீட்டுக் காவலில்" வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் தெலுங்கானா அரசு கோகாபேட்டில் நடத்திய நில ஏலத்தில் ரூ .1,000 கோடி முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் திங்களன்று கோகாபேட்டில் தர்ணா நடத்த திட்டமிட்டிருந்தது, போராட்டத்திற்கு முன்னதாக, ரேவந்த் ரெட்டி, சங்க ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவர் டி.ஜெயபிரகாஷ் ரெட்டி, மல்லு பட்டி விக்ரமார்க்கா, முகமது அலி ஷபீர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் "வீட்டுக் காவலில்" வைக்கப்பட்டனர்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவை சபாநாயகருக்கு ரேவந்த் ரெட்டி எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டதாக கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் நான் கோகாபேட் நில விற்பனை முறைகேட்டை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்ற அச்சத்தில், முதல் மந்திரி மற்றும் டிஜிபி ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் என்னை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து விட்டனர். எதுவாக இருந்தாலும் சத்தியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என கூறினார்.