கன்டெய்னர் லாரி
திருப்பூரில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 150 பண்டல் துணிகள் ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பீகார் மாநிலம் ரூபீடகா கிராமத்தை சேர்ந்த மகபூப் மகன் சவுகின் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் துரைஏரி பஸ் நிறுத்தம் அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், கன்டெய்னர் லாரியில் இருந்து புகை வருவதை பார்த்து டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிரைவர் சவுகின், சாலயோரம் லாரியை நிறுத்தினார். அப்போது கன்டெய்னரில் இருந்து அதிக அளவில் புகை வந்து கொணடிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.3 கோடி துணிகள் நாசம்
இதையடுத்து அக்கம் பக்கத்தினர், பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கும், கந்திகுப்பம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் ராமச்சந்திரன், பர்கூர் நிலைய அலுவலர் செங்குட்டுவேலு, கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வாகனங்களில் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் லாரியில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.