ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் ராய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி சொன்வானி (வயது 20) என்ற இளம்பெண் லல்லு சட்னாமி என்ற வாலிபரை காதலித்து வந்தார். கடந்த 18-ந்தேதி சரஸ்வதியை தனது வீட்டுக்கு வருமாறு லல்லு அழைத்திருந்தார். அதன்படி அவரும் காதலனின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு சென்றபோது லல்லு வீட்டில் இல்லை. ஆனால் சரஸ்வதியை பார்த்ததும் லல்லுவின் தாய் மற்றும் அண்ணி ஆகியோர் சேர்ந்து சரஸ்வதியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது உடலில் மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் போலீசுக்கு தெரிவித்தது. அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து லல்லுவின் பெற்றோர் மற்றும் அண்ணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
உயிருடன் எரிக்கப்பட்ட சரஸ்வதி 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் ராய்ப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.