தேசிய செய்திகள்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: அபு சலீம், முஸ்பதா தோசா உள்ளிட்டோர் குற்றவாளி

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலீம், முஸ்பதா தோசா உள்ளிட்டோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ந் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேருக்கு 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை கடந்த 2007 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியது.

இதன் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 2015 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தாதா தாவூத் இப்ராகிம், அனிஸ் இப்ராஹிம்,டைகர் மேமன் உள்ளிட்ட 27 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான மற்றொரு வழக்கு மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தாதா அபு சலீம், முஸ்தபா தோசா ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல் கயூம் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.