புதுடெல்லி,
டெல்லியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத ஒழிப்பு குழுவின் சிறப்பு கூட்டம் நடந்து வருகிறது. அதன் 2-வது நாளான இன்று ஐ.நா. பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு அதிகாரி விளாடிமிர் வோரன்கோவ் கலந்து கொண்டு இன்று பேசினார்.
அவர் பேசும்போது, பயங்கரவாதிகள் தங்களுடைய செயல்திட்டங்களை நவீனப்படுத்த தொழில் நுட்பங்களை தவறாக மற்றும் முறைகேடாக பயன்படுத்தி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிக்கின்றனர் என கூறியுள்ளார்.
புதிய தொழில் நுட்பங்கள் வெளிவரும்போது மற்றும் பரவலாக கிடைக்கும்போது, உறுப்பு நாடுகள் எதிர்கொள்ள கூடிய பன்முக மற்றும் சிக்கலான சவால்களை தீர்க்க வேண்டிய அவசர தேவையில் உள்ளன.
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயங்கரவாத செயல்களை அடையாளம் காணுதல், கண்காணித்தல், புலனாய்வு செய்தல் மற்றும் விசாரணை மேற்கொள்ளல் உள்ளிட்டவை இந்த சவால்களில் அடங்கும் என கூறியுள்ளார்.
இன்றைய தினம் நடந்த கூட்டத்தில், அவருக்கு முன்பு பேசிய ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ், பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீங்கு ஆகியவை பற்றி சுட்டி காட்டி பேசினார்.