ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் கனிகாம் என்ற கிராமத்தில் நேற்று மதியம் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதையடுத்து அந்த பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தபடி தாக்குதல் நடத்தி வந்ததால், வெகு நேரமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. பின்னர் இரவு நேரத்தில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.