புதுடெல்லி,
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் வெளிவிவகார மந்திரிகள் மட்டத்திலான பாதுகாப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதுபற்றி ஜப்பான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2019ம் ஆண்டு நியூயார்க் நகரில் 4 நாடுகளின் வெளிவிவகார மந்திரிகளின் பேச்சுவார்த்தை முதன்முறையாக நடந்தது.
இதனை தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஆண்டு டோக்கியோ நகரில் மற்றொரு சந்திப்பு நடந்தது என தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 6ந்தேதி டோக்கியோவில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக 4 நாடுகள் தரப்பிலான 3வது பாதுகாப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில், இந்தோ-பசிபிக் மண்டலத்தில் திறந்த, வெளிப்படையான தன்மையை மேம்படுத்தும் வகையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்ட மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்களில் தங்களது பார்வைகளை நான்கு நாடுகளும் பரிமாறி கொள்ளும்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான சந்திப்பு இன்று நடைபெறும். இந்த சந்திப்பில், கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள எடுத்து வரும் முயற்சிகள், உலகளாவிய பருவநிலை மாற்றம் மற்றும் பிற பரஸ்பர நலன்களுக்கான விவகாரங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளது.