தேசிய செய்திகள்

மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரசார இயக்கம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டியின் கூட்டம் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்பு அவருடைய தலைமையில் நடைபெறும் 2-வது காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும்.

இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேல், அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். உடல் நலக் குறைவு காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக வங்கி முறைகேடு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம், ரபேல் போர் விமான ஊழல், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை குறித்து நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மேகாலயா மாநிலங்களில் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பியோடிய தொழில் அதிபர் மெகுல் சோக்ஷி பற்றி இந்திய அதிகாரிகள் தவறான எந்த தகவலையும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று ஆன்டிகுவா அரசு கூறியதாக வெளியான செய்தி தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி அளிப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்ஷிக்கு மோடி அரசு ஆதரவாக உள்ளதாக காங்கிரஸ் காரிய கமிட்டி குற்றம் சாட்டியது.

நேற்றைய கூட்டம் பற்றி ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், இன்று ஒரு அணியாக நாங்கள் சந்தித்தோம். நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்தோம். மோடி அரசின் ஊழல்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதில் கண்ட தோல்வி போன்ற விவகாரங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த காங்கிரசுக்கு உள்ள அரிய வாய்ப்பு பற்றியும் விவாதித்தோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கூட்டத்துக்கு பின்பு, காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் பிரசார இயக்கம் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வரும் நாட்களில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

பிரதமர் மோடியோ அல்லது ராணுவ மந்திரியோ பிரான்சில் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானத்தின் விலைபற்றி எந்த தகவலையும் வெளியிட மறுக்கின்றனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மோடி அரசோ, ஒரு விமானத்தை ரூ.1,676 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதனால் அரசின் கருவூலத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அசாமில் தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் ராஜீவ்காந்தி 1985-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது மாநில அரசுடன் செய்து கொள்ளப்பட்டது. இதில் எந்த இந்தியரின் பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2005 முதல் 2013-ம் ஆண்டு வரை 82,728 வெளிநாட்டவர்கள் (வங்காளதேசவாசிகள்) நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் மோடி அரசின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 1,822 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

அசாம் விவகாரத்தில் வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்