புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று கன்னி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
23 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடும், பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம்; இப்போதும் நான் 124 ஏ சட்டத்தின் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி.
2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 2019-ம் ஆண்டு கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தின் 5-ம் நாள் சென்னை சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்து இருக்கின்றது. என்னுடைய பெயர் இந்தியக் குற்றவியல் சட்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. இப்போது நான் பிணை விடுதலையில் இருக்கின்றேன். என் மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கின்றது. இன்னும் 2 வாரங்களில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
அந்த வழக்கில் ஒருவேளை சென்னை ஐகோர்ட்டு எனக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தால், நான் இந்த அவையின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிடுவேன். இனி என்னால் திரும்ப இங்கே வரமுடியாது. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் லட்சியங்களுக்காக வாழ்கிறேன்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டேன். என்னுடைய அனுபவத்தில், ஒரு அரசியல்வாதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஏற்ற இடம் சிறைச்சாலைதான் என்பது என் கருத்து. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படியும், சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட பல்வேறு மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதாக மக்களவையில் அரசு கூறி இருக்கின்றது. இந்தச் சட்டத் திருத்தம் எந்த ஒரு தனி மனிதனையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கே பயன்படும்.
இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், இந்தியா ஒரே நாடு என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது. உண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல இந்திய ஐக்கிய நாடுகள் என்றே அழைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது. எனவே இந்தக் கடுமையான, அடக்குமுறையான, சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித்தள்ள வேண்டும் என இந்த அவையை வேண்டுகிறேன். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக்கூடையில் தூக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.
நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன், வைகோ உரையை வெகுவாகப் பாராட்டினார். தன் கைப்பையில் இருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்தார். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தீப்பொறி பறந்தது என்றார். தி.மு.க., அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்.