மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு கடந்த 21-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா-சிவசேனா கட்சிகள் ஓர் அணியாக போட்டியிட்டன. இந்த கூட்டணியில் பாரதீய ஜனதா 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாக போட்டியிட்டன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் 147 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மீதம் உள்ள தொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
இந்த இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவநிர்மாண் சேனா, சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.
288 தொகுதிகளிலும் மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 269 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த கூட்டணி அதை விட அதிக இடங்களை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் மீண்டும் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
இந்த வெற்றியை அக்கட்சிகளின் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி பெற்றார்.
மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பேரன் ஆதித்ய தாக்கரே (மும்பை ஒர்லி), காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான் (போகர்), பிரிதிவிராஜ் சவான் (காரட்), காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாகேப் தோரட் (சங்கம்னேர்), தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் (பாரமதி) ஆகியோரும் வெற்றிக்கனியை ருசித்தனர்.
மறைந்த பாரதீய ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேயின் மகளும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான பங்கஜா முண்டே பார்லி தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மேலும் சில மந்திரிகளும் தோல்வியை தழுவினர்.
மும்பை சயான் கோலிவாடா தொகுதியின் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வான கேப்டன் தமிழ்ச்செல்வன் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மற்றொரு தமிழரான கணேஷ்குமார் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. என்றாலும் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.
அவர் மீண்டும் பாரதீய ஜனதா சார்பில் சட்டசபைக்கு செல்கிறார்.
மராட்டியத்தில் ஆளும் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்று பாரதீய ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
அதாவது, முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அந்த கட்சி வலியுறுத்துவதாக தெரிகிறது. ஆட்சியில் சமபங்கு என்பது ஏற்கனவே பேசி தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி ஏற்படும் என்று தெரிகிறது.
2014-ம் ஆண்டில் நடைபெற்ற மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 4 பெரிய கட்சிகளுமே தனித்தனியாக போட்டியிட்டன.
அப்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும், பாரதீய ஜனதா 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. சிவசேனாவுக்கு 63 இடங்களும், காங்கிரசுக்கு 42 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 41 இடங்களும் கிடைத்தன. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. பின்னர் சிவசேனா அந்த அரசில் தன்னை இணைத்துக் கொண்டது. இரு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போதிலும் கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பு எதுவும் வரவில்லை.
இந்த சட்டசபை தேர்தலில் 164 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதா குறைந்தபட்சம் 145 இடங்களை கைப்பற்றி இருந்தால் தனித்து ஆட்சி அமைத்து இருக்க முடியும். ஆனால் அந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், கூட்டணி ஆட்சி உறுதியாகிவிட்டது.