தேசிய செய்திகள்

ஜோதிடருடன் உல்லாசம்... மனைவியை கண்டித்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்

சமாதானம் பேச சுசித்ராவின் தந்தை அவரது வீட்டுக்கு மகேஷ் நாயக்கை அழைத்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். இவருக்கு திருமணமாகி சுசித்ரா என்ற மனைவியும், 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வந்தவர் கமலாகர் பட். இவர் ஜோதிடர் ஆவார்.

இந்த நிலையில் மகேஷ் நாயக்கின் மனைவி சுசித்ராவுக்கும், ஜோதிடர் கமலாகர் பட்டுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது.

இதுபற்றி சுசித்ராவின் 18 வயது மகளுக்கு தெரியவந்தது. அதாவது ஜோதிடருடன் சுசித்ரா சுற்றித்திரிவதை அவரது மகள் நேரில் பார்த்துவிட்டார். பின்னர் இதுபற்றி அவர், தனது தந்தை மகேஷ் நாயக்கிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் நாயக், தனது மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. ஜோதிடருடன் தொடர்ந்து சுற்றித்திரிந்தார். இதையடுத்து சித்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி மகேஷ் நாயக் புகார் அளித்தார்.

அதையடுத்து போலீசார் சுசித்ரா மற்றும் ஜோதிடர் கமலாகர் பட்டை அழைத்து கண்டித்து அனுப்பினர். இதையடுத்து சுசித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து சமாதானம் பேச சுசித்ராவின் தந்தை அவரது வீட்டுக்கு மகேஷ் நாயக்கை அழைத்தார். அதன்பேரில் மகேஷ் நாயக், தனது தம்பி வசந்த் நாயக், உறவினர் குமார் ஆகியோருடன் சென்றார். அப்போது அங்கு சுசித்ரா, அவரது தந்தை, ஜோதிடர் கமலாகர் பட் மற்றும் 4 பேர் என மொத்தம் 7 பேர் இருந்தனர்.

இந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையில் கோபமடைந்த சுசித்ரா, கமலாகர் பட் உள்பட 7 பேரும் சேர்ந்து மகேஷ் நாயக் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதில் வசந்த் நாயக் உயிரிழந்தார். மகேஷ் நாயக் மற்றும் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சித்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசித்ரா, கமலாகர் பட், சுசித்ராவின் தந்தை உள்பட 7 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.