தேசிய செய்திகள்

பொன்மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: ‘ஓய்வுபெற்ற அதிகாரி விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இல்லை’ - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

பொன்மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு எதிரான வழக்கில், “ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி புலன் விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இல்லை” என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்றார். அவரை மேலும் ஒரு வருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 28-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு உண்டா என்பது பற்றி முதலில் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் எதிர்மனுதாரர்கள் டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அரசின் மனுவின் மீது பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் தரப்பில் ஏற்கனவே பதில் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதத்தை தொடங்கியதும், பணி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை கோர்ட்டு நியமிக்கும் அதிகாரத்தை சட்டம் அளித்து உள்ளதா? என்ற கேள்விக்கான விளக்கத்துடன் வாதத்தை தொடங்குங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

கே.கே.வேணுகோபால் தன்னுடைய வாதத்தில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற அதிகாரி, போலீஸ் அதிகாரியாக முடியாது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள சட்டத்தில் இடம் இல்லை. அந்த அதிகாரியால் யாரையும் கைது செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது சென்னை ஐகோர்ட்டு அந்த அதிகாரிக்கு பணிநீட்டிப்பு வழங்கியது தவறான நடைமுறை. கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அவர் தொடர்பான வழக்கில் நோட்டீஸ் மட்டுமே அனுப்ப உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பற்றி அவர் தவறான தகவலை சென்னை ஐகோர்ட்டுக்கு அளித்து இருக்கிறார். இது கண்டனத்துக்கு உரியது என்றார்.

பின்னர் வாதங்கள் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்