தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று ‘மக்கள் ஊரடங்கு’ ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சீனாவில் உருவாகி இன்று உலகையே முடக்கிபோட்டு இருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகவும் மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கேட்டுக்கொண்டார்.

மேலும் சேவை செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள பாராட்டும் விதமாக பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாலை 5 மணிக்கு கைதட்டி பாராட்ட வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள்விடுத்தார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் மால்கள், சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் ஊரடங்கையொட்டி இன்று (ஞாயிறு) நாடு முழுவதும் 3,700 ரெயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில்கள், நாடு முழுவதும் 2,400 பயணிகள் ரெயில்கள் மற்றும் 1,300 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவுகள் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சர்வதேச விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அரசு பஸ்கள் ஓடாது என அறிவித்து உள்ளது. ஆம்னி பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், நீண்டதூர ரெயில்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. மின்சார ரெயில்கள் கணிசமாக அறிவிக் கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என அறிவித்து உள்ளனர்.

தனியார் பால் விற்பனையும் காலை 7 மணிக்கு மேல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டும் இன்று அடைக்கப்பட உள்ளது. தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கால் டாக்சிகளும் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கையொட்டி இன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடைகள், ரெயில் நிலையங்கள் அடைக்கப்படுவதால் ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளனர். மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வீதிகளில் கூட்டமாக வந்தால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

மெரினா உள்பட கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி யாரும் உள்ளே செல்லாதவகையில் போலீசார் நேற்று மதியம் முதலே நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் ஊரடங்கை கடைபிடிக்கப்படும் சூழலில் அத்தியாவசிய தேவையான ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், பெட்ரோல் நிலையங்கள், ஆவின்பால் வினியோகம், அம்மா உணவகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பையொட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பகல்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாநில அரசுகள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி விவரமாக கேட்டறிந்தார். அத்தியாவசிய பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடு களை உறுதி செய்யவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமரின் ஊரடங்கை முழுமையாக செயல்படுத்திட வேண்டும் என அவர் மாநில தலைமை செயலாளர்களிடம் வலியுறுத்தினார்.

மேலும் பிரதமர் அறிவிப்பின்படி இன்று மாலை கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்களை பாராட்டும் வகையில் பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறே கைதட்டும் நிகழ்ச்சி பற்றியும் அவர் கேட்டறிந்தார். இன்று மாலை 5 மணிக்கு பொதுமக்கள் கைதட்டும் வகையில் ராணுவம், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சைரன் மற்றும் மணி அடிக்க வேண்டும் அப்போது அனைவரும் கைதட்டி ஒலி எழுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு