புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 18 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நேரத்தை பயன்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கடந்த 4 நாட்களில் தனது 150 அலுவலகங்களை மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தவுடன், இந்த அலுவலகங்களை அக்கட்சி தொண்டர்கள் பறித்துக் கொண்டனர். சுவர்களில் தங்களது சின்னத்தை வரைந்து கொண்டனர்.
8 ஆண்டுகள் கழித்து, அந்த அலுவலகங்களை கம்யூனிஸ்டு கட்சி மீட்டதுடன், தனது கொடியை பறக்க விட்டுள்ளது. அலுவலகங்களை மீட்க பா.ஜனதா உதவியதாக கூறப்படும் தகவலை மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துள்ளது.