தேசிய செய்திகள்

ஜனதாதளம் எஸ் கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி தருமாறு காங்கிரஸ் கோரிக்கை

ஜனதாதளம் எஸ் கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி தருமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

ஜனதாதளம்(எஸ்) கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி வழங்கும்படியும், 20 மாதங்களுக்கு ஒருமுறை மந்திரிசபையை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் புது கோரிக்கையை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றுள்ளனர். மந்திரிசபையில் 22 இடங்கள் காங்கிரசுக்கும், 12 இடங்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் 2 கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது நிதித்துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை 2 கட்சிகளும் கேட்கிறது. துறைகளை பங்கிட்டு கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், ஜனதாதளம்(எஸ்) கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்கும்படியும், 20 மாதங்களுக்கு ஒரு முறை மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் புது கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்க குமாரசாமி மறுத்து விட்டதாகவும், மந்திரிசபை 20 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் பலர் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் 20 மாதங்களுக்கு ஒருமுறை மந்திரிசபையை மாற்றி அமைப்பதன் மூலம் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஆட்சியை சுமுகமாக நடத்தலாம் என்று குமாரசாமி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு