தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு மற்றும் திறன் வாய்ந்தவை: மத்திய மந்திரி

கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு நிறைந்தவை மற்றும் திறன் வாய்ந்தவை என மத்திய மந்திரி ஹர்ச வர்தன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக குறைந்து வருகின்றன என்பது ஆறுதலளிக்கிறது. எனினும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், உலக நாடுகள் தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

அந்த வகையில், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

எனினும், தடுப்பூசி போட்ட பின்னர் வயது வித்தியாசமின்றி ஒரு சிலர் உயிரிழந்து வரும் சம்பவங்களும் வெளிவருகின்றன. ஆனால், தடுப்பூசிக்கும், உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு நிறைந்தவை மற்றும் திறன் வாய்ந்தவை என்பது தெளிவானது. பக்க விளைவுகள் ஏற்படுகிறது என கூறப்படுவது பொதுவானது.

எந்தவொரு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பும் இதனை நீங்கள் காணலாம். தடுப்பூசி என்பது கொரோனாவுக்கான கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி ஆகும். அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை சிலர் பரப்புவது துரதிர்ஷ்டவசம் ஆனது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்களில் ஒரு சிலர் தயக்கம் காட்டுவதற்கு வழிவகுத்து உள்ளது.

இதுபோன்ற தயக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள அரசும் விரும்பவில்லை. நம்முடைய மருத்துவர்களை போன்று ஒவ்வொருவரும் சம பாதுகாப்பு பெற வேண்டும் என்றே கூறுகிறோம் என மத்திய மந்திரி ஹர்ச வர்தன் கூறியுள்ளார்.