தேசிய செய்திகள்

நாடு கேள்வி கேட்கிறது; அரசோ பதிலளிக்காமல் தப்பியோடுகிறது: ராகுல் காந்தி பரபரப்பு பதிவு

ராகுல் காந்தி அவையின் விதிகளை மீறுகிறார் என பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், சீன ராணுவம் நம்முடைய எல்லைக்குள் நுழைந்த முக்கிய தருணத்தில், ராணுவ தலைமை தளபதியோ காத்திருக்க வைக்கப்படுகிறார். ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பிரதமரோ, நீங்கள் எது சரியென நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள் என கூறுகிறார்.

நாட்டின் பாதுகாப்பில் மிக தீவிர நெருக்கடியான நேரத்தில், அரசியல்தனத்துடன் தன்னுடைய கையை உயர்த்துகிறார். அதுபற்றி ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதும்போது, ராணுவத்தை அரசியல் தலைமை தனித்து விட்டு விட்டது என உணர்ந்தேன் என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த உண்மையை பேச விடாமலே என்னை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். நாடு கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறது. ஆனால், அரசோ பதிலளிக்காமல் தப்பியோடுகிறது என பரபரப்பாக பதிவிட்டு உள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அவையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவை இந்திய ராணுவம் எதிர்கொண்டது பற்றி நரவானே எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்ட சில விசயங்களை பற்றி பேச வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.

தொடர்ந்து பல்வேறு முறை அவையில் அமளியும், கூச்சலும் எழுந்து, நாள் முழுவதற்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி அவையின் விதிகளை மீறுகிறார் என பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.