புதுடெல்லி,
டிரோன் என்று அழைக்கப்படுகிற சிறிய ரக ஆளில்லா விமான போக்குவரத்தை கையாள்கிற வகையில், தற்போதைய விமான போக்குவரத்து மேலாண்மை வடிவமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் 1000 அடிக்கு கீழான வான்வெளியில் ஆளில்லா விமான போக்குவரத்தை இயக்குவதற்கு ஏற்ற வகையில் புதிய போக்குவரத்து மேலாண்மை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன,
மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வழக்கமான வழிமுறைகளை பயன்படுத்தி, இந்திய வான்வெளியில் ஆளில்லா விமானங்களை ஒருங்கிணைக்க பருமனான, விலை உயர்ந்த வன்பொருள் (ஹார்டு வேர்) பொருத்தி இருக்க வேண்டும்.
* இதற்கு தனியான, நவீனமான, முதன்மையான சாப்ட்வேர் அடிப்படையில் ஆளில்லா விமான போக்குவரத்து மேலாண்மை முறை வேண்டும். அவை பின்னர் பாரம்பரிய விமான போக்குவரத்து மேலாண்மையுடன் இணைக்கப்படும்.
* மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்கள், பதிவு, விமான திட்டமிடல், துணைத்தரவுகளுக்கான அணுகல் போன்ற சேவைகளை வழங்க அனுமதிக்கப்படுகிறது.
* பசுமை மண்டலத்தில் இயக்கப்படுகிற நானோ டிரோன்களைத் தவிர்த்து, பிற டிரோன்கள் அனைத்தும் நெட்வொர்க் மூலம் நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்கள் மூலமாகவோ தங்களது நிகழ்நேர இருப்பிடத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
* மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்கள், டிரோன்களை இயக்குவோரிடம் சேவை கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படும். இதில் ஒரு சிறிய பகுதி, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்துடன் பகிரப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.