சந்திராப்பூர்,
மராட்டியத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதில் வன அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சுவாதி தூமனே. இந்த பெண் அதிகாரி, புலி கணக்கெடுப்பு பணிக்காக 3 உதவியாளர்களுடன் இன்று காலை 7 மணியளவில் வனத்திற்குள் சென்றுள்ளார்.
அந்த குழு 4 கி.மீ. தூரம் உள்ளே சென்றதும் சாலை மீது பெண் புலி ஒன்று அமர்ந்து இருந்துள்ளது. இதனை 200 மீட்டர் தொலைவில் இருந்து அவர்கள் கவனித்து உள்ளனர். அதன்பின் அரை மணிநேரம் காத்திருந்த அவர்கள், வேறு வழியில் அடர்ந்த வன பகுதிக்குள் செல்ல முயன்று உள்ளனர்.
ஆனால், வனத்தில் அந்நியர்கள் சிலர் நுழைந்துள்ளது பற்றி அறிந்த அந்த பெண் புலி, அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. அவர்களை துரத்தி சென்றுள்ளது. 3 உதவியாளர்கள் முன்னே ஓட, தூமனே பின் தொடர்ந்துள்ளார். எனினும், பெண் அதிகாரியை பிடித்து, புலி காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளது.
இதன்பின்னர் வன பணியாளர் உதவியுடன், உயிரிழந்த அதிகாரியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டது என்று முதன்மை வன காப்பாளர் ஜிதேந்திரா தெரிவித்து உள்ளார்.