தேசிய செய்திகள்

இலவச தடுப்பூசி திட்டம் எதிர்காலத்திலும் தொடரும்; கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

டாக்டர்களுடன் உரையாடினார்

பிரதமர் மாடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் நேற்று இ்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்கள பணியாளர்கள் சிலருடன் உரையாடினார். கொரோனா ஒழிப்பு பணியிலும், தடுப்பூசி செலுத்துவதிலும் தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்களிடம், கொரோனாவின் பிடியில் இருந்து நாட்டு மக்கள் விரைவில் விடுபடுவார்கள் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது:-

கொரோனா முதலாவது அலையை நாடு வெற்றிகரமாக முறியடித்தது. அதன்மூலம் தன்னம்பிக்கையையும், மனஉறுதியையும் பெற்றது.

ஆனால், இரண்டாவது அலை, நாட்டு மக்களின் பொறுமையையும், அவர்கள் எந்த அளவுக்கு வலியை தாங்குவார்கள் என்றும் சோதித்து வருகிறது. நாட்டையே இந்த புயல் அசைத்து பார்த்து விட்டது. கொரோனாவை வீழ்த்துவதுதான் இப்போது மிகப்பெரிய முன்னுரிமை பணியாகும். இந்த போரில் வெற்றி பெற நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட போதிலும், கணிசமானோர் குணமடைந்து வருகின்றனர்.

இப்போது கொரோனா தடுப்பூசி குறித்து எல்லோருக்கும் விழிப்புணர்வு வந்து விட்டது. தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ந் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.இலவச கொரோனா தடுப்பூசி திட்டம், எதிர்காலத்திலும் தாடரும். கொரோனாவை ஒடுக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து உதவுவோம். முடிந்த அளவுக்கு அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கார்ப்பரேட் நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடச்செய்து இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.