தேசிய செய்திகள்

ரபேல் விமான பேரத்தில் ராகுல் குற்றச்சாட்டு: ‘ரகசியங்களை வெளிப்படுத்த முடியாது’ பிரான்ஸ் அரசு பதில்

ரபேல் விமான பேரத்தில் ராகுல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பிரான்ஸ் அரசு, ரகசியங்களை வெளிபடுத்த முடியாது எனக் கூறியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். அப்போது அவர், ரபேல் போர் விமான பேரத்தில் பிரதமரிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசவில்லை என்றும், இந்த பேரத்தில் இந்திய அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையே எந்த ரகசியமும் இல்லை என்று பிரெஞ்சு பிரதமர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு பிரான்ஸ் அரசு நேற்று உடனே பதில் அளித்தது.

இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை நாங்கள் கவனத்தில் கொண்டோம். 2008-ம் ஆண்டு, இந்திய, பிரான்ஸ் அரசுகளிடையே ராணுவ ஒப்பந்தம் முடிந்தது. தளவாடங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு திறனை பாதிக்கும் என்பதால் சட்டப்பூர்வமாக இரு தரப்பு ரகசியத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்துகிறது என்றார்.

மேலும், இந்தியா டுடே பத்திரிகைக்கு எங்கள் நாட்டின் அதிபர் கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி அளித்த பேட்டியில் பகிரங்கமாக குறிப்பிட்டு உள்ளபடி இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது என்றால் அது குறித்த தகவல்களை நாங்கள் வெளிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.