தேசிய செய்திகள்

கொச்சி விமானத்தில் நடுவானில் குழந்தை பெற்ற பெண்

சவுதி அரேபியாவின் தமாமில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு நேற்று அதிகாலை 2.55 மணிக்கு 162 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டது.

புதுடெல்லி,

சவுதி அரேபியாவின் தமாமில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு நேற்று அதிகாலை 2.55 மணிக்கு 162 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் இருந்தார். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே இது குறித்து விமான ஊழியர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனே அந்த விமானம் மும்பைக்கு திருப்பப்பட்டது. எனினும் விமானம் அரபிக்கடலுக்கு மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த சில பயணிகளும், விமான பணிப்பெண்களும் சேர்ந்து அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

பின்னர் விமானம் மும்பையில் தரையிறங்கியதும் தாயையும், சேயையும் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் மும்பையில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் நண்பகல் 12.45 மணிக்கு கொச்சி வந்து சேர்ந்தது.

தங்கள் விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் இலவசமாக பயணம் செய்யும் சலுகையை அந்த விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.