புதிய கட்டிடங்கள் திறப்பு
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று காரைக்கால் மாவட்டத்துக்கு வருகை தந்தார். அம்பகரத்தூர், சுரக்குடி, வடகட்டளை, திருவேட்டக்குடி, திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிறுத்தம், சமுதாயக்கூடம், பயணிகள் தங்கும் விடுதி, கைப்பந்து மைதானம் ஆகிய கட்டிடங்களை நாராயணசாமி திறந்து வைத்தார்.
தொடர்ந்து காரைக்கால் பஸ் நிலையத்துக்கு எதிரே, பிள்ளைத்தெருவாசல் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலையையும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தவறான தகவல்
காரைக்கால் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வருகிற 7-ந் தேதி முதல் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். அண்மையில் புதுச்சேரி, காரைக்கால் வந்த தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனை, நான் இரவில் சென்று சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக செய்தி வெளியாகி இருப்பது முற்றிலும் தவறானது.
கடந்த சில நாட்களாக, திருத்தி அமைக்கப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி அபராதம் வசூல் செய்யப்படுகிறது. இது சாமான்ய மக்களை மிக கடுமையாக பாதிக்கும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக அதனை செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் கவர்னர் கிரண்பெடி, இந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். இதனை கடுமையாக அமல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலில் எதிரொலிக்கும்
பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னரை சந்தித்து, இந்த சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். சட்டத்தை கொண்டு வந்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதனை நடைமுறைப்படுத்த துடிப்பது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர். ஆனால் கெட்டப்பெயர் வாங்குவது, எங்கள் அரசு. இந்த நாடகத்தை மக்கள் நன்றாக அறிவார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் இது எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருணாநிதி பெயர்
நிகழ்ச்சியின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை, முன்னாள் அமைச்சரும், தி.மு.க. அமைப்பாளருமான நாஜிம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது புதிதாக திறக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலைக்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்ததுபோல் கருணாநிதி பெயர் சூட்டவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அவசர கோலத்தில் திறப்பு விழா நடந்ததால் கருணாநிதி பெயர் வைக்க முடியாமல் போய்விட்டது. ஓரிருநாளில் அவரது பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி கூறினார்.