பனாஜி,
இந்தியாவின் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் வருகிற நவம்பர் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்படும்.
இந்த திருவிழாவில், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்படும். சிறந்த திரைப்படம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது. இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. இதனால், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் கூட நடத்த முடியாமல் போனது. பின்னர் ரசிகர்கள் இன்றியும், குறைந்த அளவிலான ரசிகர்களுடனும் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட சில விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. திரைப்பட படப்பிடிப்புகளும் மற்றொரு புறம் முடங்கின.
இந்நிலையில், 51வது சர்வதேச திரைப்பட திருவிழாவை நடத்துவது பற்றி கோவா முதல் மந்திரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இந்த ஆண்டு நவம்பர் இறுதி வாரத்தில் திட்டமிடப்பட்டபடி, சர்வதேச திரைப்பட திருவிழா 2020 நடத்தப்படும். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அனைத்து நடைமுறைகளும் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.