திஸ்பூர்,
கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவிற்கு சொந்தமான, அவரது கையெழுத்திடப்பட்ட பாரம்பரிய கைக்கடிகாரம் உள்ளிட்ட சில பொருட்கள், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரடோனாவின் கைக்கடிகாரம் அங்கிருந்து திருட்டு போனது.
இது குறித்து துபாய் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கைக்கடிகாரத்தை இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்ற நபர் திருடிச் சென்றதாக கண்டறிந்தனர். அந்த நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்த வாசித் ஹூசைன், தனது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விடுப்பு எடுத்துக் கொண்டு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து மத்திய புலனாய்வுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், அசாம் மாநிலம் சிவசாகர் பகுதியைச் சேர்ந்த வாசித் ஹூசைனை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.