தேசிய செய்திகள்

பட்டாசு வழக்கில் தமிழக அரசு புதிய மனு

பட்டாசு வழக்கில் தங்களையும் ஒருதரப்பாக சேர்க்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. நீதிபதிகள் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்பட சுமார் 100 பேர் இந்த வழக்குக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் வினோத் கன்னா கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டதாவது:-

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்பட பல்வேறு பகுதியில் சுமார் 1000 பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் சுமார் ரூ.6,000 கோடி வணிகம் நடைபெறுகிறது. இந்த தொழிற்சாலைகளால் நேரடியாக சுமார் 3 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 5 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

பட்டாசு தொழிலுக்கு தடை விதித்தால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். தசரா, தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிப்பது என்பது நம் நாட்டின் கலாசார கொண்டாட்டத்தின் பகுதியாகும். அரசின் அனுமதியோடு நடைபெறும் இந்த பட்டாசு தயாரிப்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வேதியியல் பொருட்கள் எவையும் பயன்படுத்தப் படுவதில்லை.

இந்த வழக்கில் தமிழக அரசு ஆஜராகி தங்களுடைய தரப்பை முன்வைக்க விரும்புகிறது. எனவே, தமிழக அரசையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த மூல வழக்கில் தமிழக அரசின் மனுவும் பட்டியலிடப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அருண் குமார் சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூல மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் வழக் கின் மீதான விசாரணை மீது ஒத்திவைப்பு கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்