தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (வயது 70) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொரேனா பாதிக்கப்பட்டுள்ள வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் மரணம் அடைந்தார்.

இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிந்தார். காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமாருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் சிறந்த தலைவரும், கடின உழைப்பாளியுமான எச்.வசந்தகுமாரை இழந்து விட்டோம். காங்கிரஸ் பேரியக்கமே நல்ல தலைவரை இழந்து நிற்கிறது. எச்.வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோவிட் -19 காரணமாக கன்னியாகுமரி எம்.பி. ஸ்ரீ எச் வசந்தகுமாரின் மரணம் பற்றிய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மக்களுக்கு சேவை செய்வதற்கான காங்கிரஸ் சித்தாந்தத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்கு சேவை செய்தவர் வசந்தகுமார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.