தேசிய செய்திகள்

இந்தியாவில் புதியவகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், ஓராண்டை கடந்து உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில், உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா உருவானது. இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலமாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள் மூலம் இந்த புதிய வகை கொரோனா ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது.

இதற்கிடையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 8-ந் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச விமானங்களில் வந்து சேரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு புதியவகை கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் மாதிரிகள், 10 அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மேலும் 15 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் தனி அறையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை