தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு, தலைமை நீதிபதி கடிதம்

சுப்ரீம் கோர்ட்டில் 58 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வழக்குகளில் நீதி வழங்குவது தாமதமாகிறது.

எனவே நீதித்துறையின் சிறந்த செயல்பாட்டுக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 3 கடிதங்களை எழுதியுள்ளார். அதில் முதல் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் 58,669 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் புதிய வழக்குகள் பதியப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீதிபதிகள் பற்றாக்குறையால் பல்வேறு முக்கியமான வழக்குகளுக்கு போதுமான அரசியல் சாசன அமர்வுகள் அமைக்க முடியவில்லை.

30 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 1988-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 18-ல் இருந்து 26 ஆக உயர்த்தியதை நீங்கள் நினைவில் கொள்ள முடியும். பின்னர் வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில் 2009-ல் இந்த எண்ணிக்கை 31 (தலைமை நீதிபதி உள்பட) ஆக உயர்த்தப்பட்டது.

எனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நீதித்துறை மிகுந்த திறமையாகவும், வலிமையாகவும் செயல்பட்டு தனது உயரிய இலக்கை அடைவதுடன், உரிய நேரத்தில் நீதியை வழங்கிடவும் முடியும். இவ்வாறு அந்த கடிதத்தில் ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல தனது 2-வது கடிதத்தில், ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக அதிகரிக்கவும், ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பவும் வேண்டுகோள் விடுத்து உள்ளார். குறிப்பாக ஐகோர்ட்டுகளில் 399 (37 சதவீதம்) நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள தலைமை நீதிபதி, இதனால் கோர்ட்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கி கிடப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட ஒருவர், தனது பணிக்குரிய திறமைகள் மற்றும் அனுபவங்களை பெற்று நன்கு செயலாற்ற தொடங்கும் போது அவர் ஓய்வு பெற்றுவிடுவதாக குறைபட்டுக்கொண்டுள்ள ரஞ்சன் கோகாய், எனவே இதை தவிர்க்க அவரது ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் 62 வயதுக்குப்பின் தீர்ப்பாயங்களில் பணியாற்ற முடியுமென்றால், அவர் ஐகோர்ட்டிலேயே 65 வயதுவரை பணியாற்றலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதைப்போல ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை பணியமர்த்துமாறும் தனது 3-வது கடிதத்தில் ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு