புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017-ல் மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சிறப்பு அனுமதி கொடுத்தது. இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
துணைநிலை ஆளுநர் எந்த உத்தரவும் போடமுடியாது, அவருடைய செயல்பாடுகள் மாநில வளர்ச்சிக்குதான் சாதகமாக இருக்க வேண்டும்.
நிதி நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, அதிகாரிகள் மாற்றம் குறித்த முழு அதிகாரமும் மாநில அரசுக்குதான் உண்டு எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இந்தத் தீர்ப்பே இறுதியானது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை மீறினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.