புதுடெல்லி
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தந்தி டி.வி.க்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். தந்தி டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் விருதை பெற்றுக் கொண்டார்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்னணு ஊடகங்களான டெலிவிஷன்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, தேசிய ஊடக விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் தினத்தன்று இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகளை தந்தி டி.வி. நடத்தியது.
ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதையும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் தந்தி டி.வி.க்கு பெரும்பங்கு உண்டு. காரசார அரசியல் செய்திகள், விவாதங்கள் என தொடர்ந்தாலும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம், ஓட்டுக்கு ஏன் பணம் வாங்கக் கூடாது?, பணம் வாங்குவது வாக்குரிமையை விற்பதற்கு சமம் என்பதை வலியுறுத்தி பல்வேறு செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்கியது.
தந்தி டி.வி.க்கு தேசிய விருது
மேலும் ஆயுத எழுத்து, மக்கள் மன்றம் மற்றும் மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் நிகழ்வுகளை நேரடியாக அரசியல் சார்பின்றி மக்களிடையே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற உறுதுணையாக இருந்தது.
இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மிகச்சிறப்பாக செயல்பட்ட மின்னணு ஊடகமாக தந்தி டி.வி.யை தேசிய விருதுக்கு தேர்வு செய்தது.
ஜனாதிபதி வழங்கினார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்து இருந்த 7-வது தேசிய வாக்காளர் தின விழாவில் தந்தி டி.வி.க்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து, தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக் கொண்டார்.
விழா அரங்கில் அளிக்கப்பட்ட கையேட்டில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்தும் வாக்காளர்களின் பங்கேற்பு குறித்தும் தந்தி டி.வி. தன்னுடைய பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டு வந்தது. மேலும் தேர்தல் தொடர்பான முக்கியமான தேதிகள் குறித்தும், தேர்தல் தொடர்பான முக்கியமான செய்திகளையும் அவ்வப்போது ஒளிபரப்பி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரிதும் உதவியாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராஜேஷ் லக்கானி
தேசிய ஊடக விருது தவிர, சிறந்த தேர்தல் பணிக்காகவும் வாக்காளர்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தியதற்காகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்புக்காக மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி கே.வீரராகவராவ், திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, புதுச்சேரி சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.சரவணன், தேர்தல் செலவுகளை சிறப்பாக கண்காணித்தற்காக தமிழ்நாடு வருமானவரி முதன்மை இயக்குனர் பி.ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் இயக்குனர் ராய் ரோஸ், தகவல் தொழில் நுட்பத்துக்காக புதுச்சேரி மாநில ஆலோசகர் கோபி சுவாமிநாதன் ஆகியோருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட இளைய தலைமுறையினர் 5 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை ஜனாதிபதி வழங்கினார்.
தலைமை தேர்தல் ஆணையர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத், துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே தேசிய அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் விழா நடைபெற்ற வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.