அமராவதி,
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டம் கம்பதூர் மண்டலம் ஒய்.சி. பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுங்கம்மா (வயது 52). இவரது மகன் வெங்கடேசுலு. ஆந்திராவில் கடந்த 13-ந்தேதி நாடாளுமன்றத்தேர்தலும், மாநில சட்டமன்றத்தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடுமாறு வெங்கடேசுலு தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த ஆட்டோவில் சென்று ஓட்டு போட்டு வந்தார்.
எனவே தனது தாய் சுங்கம்மா, தான் கூறிய கட்சிக்கு ஓட்டுப்போடாமல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குதான் ஓட்டுப்போட்டுள்ளார் என்று நினைத்த வெங்கடேசுலு கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் வீட்டில் இருந்த சுத்தியலால், நேற்று முன்தினம் பெற்ற தாய் என்றும் பாராமல் சுங்கம்மாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தலையில் பலத்த காயம் அடைந்த சுங்கம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து கம்பதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.