திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெள்ளிக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் குட்டன் (60), அவரது மனைவி சந்திரிகா (55). இந்த தம்பதிகளின் மகன் அனீஷ் (30). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அனீஷ் பெற்றோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை பொருட்படுத்தாத குட்டனும், சந்திரிகாவும் வயலில் புல் பறிக்க சென்று விட்டனர். இதையடுத்து அனீஷ் காலை 9 மணி அளவில் வயல்காட்டுக்கு அரிவாளுடன் சென்றுள்ளார்.
இதை கண்ட வயலில் புல் பறித்துக்கொண்டு இருந்த அவரது தாயும் , தந்தையும் ஒட்டம் பிடித்தனர். இருவரையும் பின்னால் துரத்தி சென்ற அனீஷ் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த குட்டனும், சந்திரிகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
இதை தொடர்ந்து போலீசுக்கு போன் செய்த அனீஷ், பெற்றோரை வெட்டிகொலை செய்து விட்டதாக கூறிவிட்டு பைக்கில் சென்று தலைமறைவானார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருச்சூர் போலீசார், தாய் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அனீஷை விலை வீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.