புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு அளிப்பதில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கு கொடுத்துவிட்டோம். இதை நீங்கள் வரவேற்க வேண்டும். திட்டங்களில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு நிர்ணய கமிட்டியிடம் வழங்கிவிட்டோம். திட்டங்களின் தன்மை, எங்களை விட மாநில கமிட்டிகளுக்கு ஆழமாக தெரியும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இதுகுறித்து தமிழகத்தின் எம்.பி.க்கள் என்னை சந்தித்தபோது தெளிவாக கூறியிருக்கிறேன். அதை இங்கே மீண்டும் கூறுகிறேன். இதுகுறித்து முதல்-அமைச்சரிடமும் என்னை சந்தித்தபோது விளக்கி உள்ளேன் என்றார்.
பின்னர் குறுக்கிட்ட கனிமொழி, தமிழக முதல்-அமைச்சர் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறார். எனவே டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஏதும் இனி செயல்படுத்தப்படாது என்று மத்திய மந்திரி உறுதி அளிப்பாரா? என்று மறுகேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜவடேகர், இது, முழுக்க முழுக்க மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு நிர்ணய கமிட்டியுடையது. மத்திய அரசுக்கு இந்த விவகாரம் வரவே வராது என்பதை தெரிவித்துக் கொள் கிறேன் என்று பதில் அளித்தார்.