புதுடெல்லி,
1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் மசூதி என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்த ஒன்று அல்ல என்று கூறி இருந்தது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும், இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவேண்டும் எனவும் கோரி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான எம்.சித்திக்கின் சட்டப்படியான வாரிசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும், இரு தரப்பினரும் தங்களுடைய எழுத்துப்பூர்வமான வாதங்களை வருகிற 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.