புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவர் தனது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டில் உள்ள தனது வக்கீல்களுடன் போனில் பேச அனுமதி கேட்டு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதை அவர்கள் நிராகரித்தனர். எனவே அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், தனது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டு வக்கீல்களுடன் பேச கிறிஸ்டியன் மைக்கேலுக்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார். ஒரு வாரத்தில் 15 நிமிட நேரம் வெளிநாட்டு போன் அழைப்புகளை அவர் மேற்கொள்ளலாம் என நீதிபதி கூறினார்.