புதுடெல்லி,
ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், மத்திய அரசின் சுகாதார நல முயற்சிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்திய ரெயில்வே நிர்வாகம் இதுவரை 5,601 ரெயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான மையங்களாக மாற்றி உள்ளது.
அவற்றில் 3,816 பெட்டிகள் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளன என தெரிவித்து உள்ளது. இதன்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட மிக குறைந்த அறிகுறிகளை கொண்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த ரெயில் பெட்டி மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.
இதுவரையில் மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்தில் 21 கொரோனா சிகிச்சை பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு 47 நோயாளிகள் அவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஷாகுர் பஸ்தியில் 50, ஆனந்த் விகாரில் 25, வாரணாசியில் 10, பதோஹியில் 10 மற்றும் பைசாபாத்தில் 10 ரெயில் பெட்டிகள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன என இந்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.