நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தனது டுவிட்டரில், கெரோனா வைரஸ் எனும் தெற்று நோய்க்கு எதிராக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் துணிவுடன் போராடி வருகின்றனர். தொற்றுநோய்கள் திருத்த அவசர சட்டம் நமது நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அவர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வர, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.