ஸ்ரீநகர்,
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜம்முவில் பெரும்பாலான பகுதிகளில் அவை விலக்கப்பட்டு இருக்கின்றன. காஷ்மீர் பிராந்தியத்திலும் கடந்த 21-ந்தேதி பல இடங்களில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன.
ஆனால் கண்டன பேரணி நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்ததால் நேற்றுமுன்தினம் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும் நேற்று சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் அந்த பகுதிகளிலும் பலத்த கெடுபிடிகள் இருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனால் காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் நேற்று 20-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடைகள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அல்லலுக்கு உள்ளாகினர். சாலைகளிலும் ஓரிரு தனியார் வாகனங்களை தவிர பிற வாகனங்களை பார்க்க முடியவில்லை.
செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு இருப்பதால் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் அவதியடைந்துள்ளனர். இந்த வீரர்கள் தங்கள் குடும்பத்தை தொடர்பு கொள்ள அவர்களின் முகாம்களில் சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தாலும், ஒருமுறை பேசுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
தொலைதூர பகுதிகளில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கண்காணிப்பில் ஈடுபட்டு விட்டு நள்ளிரவுக்குப்பின் முகாமுக்கு வரும் அவர்களால் நீண்ட நேரம் காத்திருந்தும் வீட்டை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சரியான தூக்கமும் இல்லாமல் அவதிப்படுவதாக கவலை வெளியிட்டு உள்ளனர்.
காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக கூறிய மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல் களை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். காஷ்மீர் பகுதியில் கடந்த 21-ந்தேதி 3 இடங்களிலும், 22-ந்தேதி 2 இடங்களிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததாகவும் அவர் கூறினார்.