புதுடெல்லி,
மத்திய அரசின் இடைக் கால பட்ஜெட்டை பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை என வர்ணித்த அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, வளர்ச்சி திட்டங்களை கடந்த ஆண்டே அறிவித்து இருக்க வேண்டும் என சாடினார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. நேற்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-
நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. வேலையின்மை பிரச்சினையை தீர்க்க அரசு தவறிவிட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒதுக்கீடு ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்ட போதும், கிராமப்புறங்களில் இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.
வேளாண்துறை பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி இருப்பதுடன், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை அறிவித்து இருப்பது போதாது. அதை ரூ.12 ஆயிரமாக உயர்த்த வேண்டும். உணவுப்பொருள் உற்பத்தியில் உலகின் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில், வறுமை அதிகரித்து இருக்கிறது.
ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களின் வருவாயை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளது. கூட்டாட்சி முறையில் மாநிலங்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
பணமதிப்பு நீக்கத்தால் என்ன சாதிக்கப்பட்டது? என தெரியவில்லை. ஆனால் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான சிறு வர்த்தகம் முடங்கி இருக்கிறது. முறைசாரா தொழில்துறை முற்றிலும் சீரழிந்து விட்டது. இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் அரசு பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை.
மொத்தத்தில் இது பட்ஜெட் அல்ல, மாறாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை. அப்படி அரசின் நோக்கம் உண்மையாக இருந்திருந்தால், பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டங்களை கடந்த ஆண்டே அறிவித்து இருக்க வேண்டும். இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இடையே கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரையே மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.