தேசிய செய்திகள்

எனது மகனை விமர்சிப்பவர்கள் மாற்று கருத்தையும் மதிக்க வேண்டும் - நோபல் பரிசு பெற்ற அபிஜித்தின் தாயார் சொல்கிறார்

எனது மகனை விமர்சிப்பவர்கள் மாற்று கருத்தையும் மதிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் தாயார் கூறினார்.

கொல்கத்தா,

அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் இந்திய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜிக்கும், அவரது மனைவி எஸ்தர் டப்லோவுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி, நரேந்திர மோடி அரசின் பொருளாதார கொள்கை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் பா.ஜனதா தலைவர்கள் சிலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மத்திய மந்திரி பியூஷ்கோயல் சமீபத்தில், அபிஜித் ஒரு இடதுசாரி. அவரது ஆலோசனையான குறைந்தபட்ச வருமானம் திட்டத்தை இந்திய வாக்காளர்கள் புறக்கணித்துவிட்டனர். எனவே அவரது கருத்துகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ராகுல் சின்ஹாவும், அபிஜித்தின் பொருளாதாரம் பற்றிய கருத்துகள் இந்திய மண்ணில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பா.ஜனதாவின் விமர்சனம் பற்றி அபிஜித்தின் தாயாரும், பொருளாதார நிபுணருமான நிர்மலா பானர்ஜியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது மகனுக்கு எதிராக கூறப்பட்ட கருத்துகள் குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அது அவர்களது தனிப்பட்ட உரிமை. அவர்களது பேச்சு சுதந்திரம். ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் அவர்களது சொந்த கருத்துகளை நிரூபிக்க உதவாது. விமர்சிப்பவர்கள் மற்றவர்களுக்கும் அதே உரிமை இருக்கிறது என்பதை உணர வேண்டும். விமர்சனத்துக்கான பதிலையும் மதிக்க வேண்டும்.

அபிஜித்தின் சொந்த வாழ்க்கை பற்றியும், இரண்டாவது திருமணம் பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள். வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் கருதுகிறார்களா? அப்படியென்றால் அவர்கள் ஏன் அதை செய்யவில்லை? அதுதான் வழி என்றால் நம்மை சுற்றி மேலும் பல நோபல் பரிசு பெற்றவர்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...