தேசிய செய்திகள்

போலீஸ் என கூறி காதல் ஜோடியிடம் நகை, பணம் பறிப்பு - 3 பேர் கைது

ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது, போலீஸ் என கூறி காதல் ஜோடியை தாக்கி நகை, பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொச்சி,

கேரளம் மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 24 வயது வாலிபரும், வடகராவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் கொச்சி எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து 4 நாட்கள் தங்கி இருந்தனர். அப்போது ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் 3 பேர் வந்து அறை கதவை தட்டி உள்ளனர்.

காதலன் அறை கதவை திறந்தபோது, தாங்கள் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்றும், காதலர்களின் அறையில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறினர். பின்னர் காதலர்களை ஓரமாக அமர வைத்து விட்டு, அறையை சோதனை செய்தனர். இதையடுத்து 3 பேரும் திடீரென காதலர்களை தாக்கினர். அவர்கள் மேஜையில் வைத்திருந்த முக்கால் பவுன் தங்க வளையல், ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி, இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சேர்த்தலா அருகே உள்ள வயலார் பீடிகை பகுதியை சேர்ந்த அமல் (26 வயது), பல்லுறுத்தி பகுதியை சேர்ந்த பவன் (36 வயது). இடுக்கி மாவட்டம் வரப்புழாவை சேர்ந்த தாமஸ் சாக்கோ (30 வயது) ஆகியோர் போலீசார் என கூறி ஓட்டல் அறையில் தங்கி இருந்த காதலர்களை தாக்கி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.