புதுடெல்லி,
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி முதல் விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை தாண்டியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாய்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக ஆட்சி முடிந்து 2024-ம் ஆண்டு தேர்தல் வரும்போது புதிய வேளாண் சட்டங்கள் நிச்சயம் இருக்காது. இந்த சட்டங்களை வாபஸ் பெற பாஜக ஒப்புக் கொள்ளும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த சட்டம் இருக்காது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடுவோம். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை விவசாயிகள் போராட்டம் டெல்லியில் தொடரும் என்றார்.