பெங்களூர்
கர்நாடக மாநிலம் சட்டசபை கட்டிடம் விதான சவுதாவின் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சட்டசபையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். அவர் முன்னேற்றத்திற்கு ஒரு முன்னோடியாக இருந்தார். போர் சமயங்களில் அவர் மைசூர் ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். பின்னர் இந்த தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் பின்பற்றினர்.
கர்நாடகா வலிமையான வீரர்களின் நிலமாகும். கிருஷ்ணதேவராயர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னராக விளங்கினார். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகமாக விளங்கினார்.
பெங்களூரை நிறுவியவர் கெம்பேகவுடா, கிட்டூரின் ராணி சென்னமா மற்றும் ராணி அபக்கா ஆங்லிகேயரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டனர்.
சமீபத்தில், எங்கள் சிறந்த இராணுவத் தலைவர்களான பீல்ட் மார்ஷல் கே எம் காரியப்பா மற்றும் ஜெனரல் கே.எஸ். திம்மையா ஆகியோர் கர்நாடகாவின் மகன்கள் ஆவார்கள்.
கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜக சார்பில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தொண்டர்களுடன் சென்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி கைது ஆனார்.