தேசிய செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், அழுத்தங்கள் அல்ல - தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், அழுத்தங்கள் அல்ல என்று தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டமாக கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.

இந்த நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து கூறியதாவது:-

யாருடைய அழுத்தத்துக் கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

திருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை