தேசிய செய்திகள்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் தமிழக போலீசார் விசாரணை

கர்நாடக சொகுசு விடுதியில் உள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் தமிழக போலீசார் நேற்று 3½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

பெங்களூரு

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று இந்த தனியார் சொகுசு விடுதிக்கு தமிழக போலீசார் திடீரென வந்தனர். இந்த குழுவில் நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட போலீசார் அடங்கி இருந்தனர். சுமார் 20 போலீசார் 6 வாகனங்களில் வந்ததாக கூறப்படுகிறது.

முதலில் அனுமதி மறுத்த விடுதி நிர்வாகம், பின்னர் அவர்களை மதியம் 3 மணி அளவில் விடுதிக்குள் செல்ல அனுமதித்தது. இதையடுத்து போலீசார் எம்.எல்.ஏ.க்களிடம் கட்டாயப்படுத்தியதால் தங்கி உள்ளர்களா? என விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

புகார்

இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் தாங்கள் கடத்தி வரப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தங்களுடைய குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினர் கோவை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் கோவை மாநகர துணை போலீஸ் கமிஷனர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் விடுதியில் சோதனை நடத்தி, எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தினோம் என்று கூறினார். ஆனால் தமிழகத்தை சேர்ந்த காண்டிராக்டர் ராம.சுப்பிரமணியன் மர்ம மரணம் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடம் விசாரணை நடத்த போலீசார் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2 எம்.எல்.ஏ.க்கள்

தமிழக போலீசார் விசாரணையை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணி அளவில் விடுதியில் இருந்து வெளியே வந்தனர். 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து போலீசார் பல முக்கிய தகவல்களை கேட்டறிந்து கொண்டனர்.

போலீசார் விடுதியில் விசாரணை நடத்தியபோது 2 எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல விரும்புவதாகவும், பாதுகாப்பு இல்லாததால் உங்களுடனேயே அழைத்துச் சென்றுவிடுங்கள் என்றும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அந்த எம்.எல்.ஏ.க்கள் பெயர் விவரங்கள் தெரியவில்லை.

ஆனால் போலீசாருடன் எம்.எல்.ஏ.க்கள் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை